Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் முக்கிய காரணம் இந்திய சுதந்திரத்திற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை: ஆளுநர் ஆர்.என். ரவி சர்ச்சை பேச்சு

சென்னை: இந்திய சுதந்திரத்திற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என்றும், நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் முக்கிய காரணம் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் நாகைய்யா, லட்சுமி கிருஷ்ணன், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், சிஸ்டர் நிவேதிதா பல்கலைக்கழக பேராசிரியர் பிரபால்ராய் சவுத்ரி, சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டனர்.

நேதாஜி குறித்த 5 நிமிட ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்திய தேசிய ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளை ஆளுநர் ரவி கவுரவித்தார். நேதாஜி பற்றிய பேச்சு, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்களுள் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் முதன்மையானவர்.ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம். நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில், அதிக வீரர்கள், தளபதிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால், நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி செய்யவோ, அதைப் பற்றி படிக்கவோ, பேசவோ தமிழ்நாட்டில் யாரும் முயற்சி செய்யவில்லை.

அன்றைய காலத்திலேயே, பெண்கள் படைப்பிரிவை உருவாக்கி, வழிநடத்தியவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ். நேதாஜியின் வழியில், பிரதமர் நரேந்திர மோடியும், இன்றைய இந்திய ராணுவத்தில், விமானப்படையில், கப்பல் படையில் பெண்களின் பங்கை உறுதி செய்திருக்கிறார். மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில், பிரிவினைவாத முயற்சியும் நடைபெற்றது. இந்தியர்கள் அப்போது பிரிந்திருந்தார்கள். 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு, நேதாஜியும், இந்திய தேசிய ராணுவமும்தான் முக்கிய காரணம். இந்திய தேசிய காங்கிரசால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணம் அவ்வளவுதான். ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் புரட்சிதான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான மிக முக்கிய காரணமாக இருந்தது.

அப்போதைய இங்கிலாந்து பிரதமர் இந்திய தேசிய காங்கிரசின் போராட்டம் இந்தியா சுதந்திரம் அடைய ஒரு சிறிய காரணமாக இருந்தது எனவும், நேதாஜியின் புரட்சியும், இந்திய தேசிய ராணுவத்தின் பலமும்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க மிகப்பெரிய காரணமாக இருந்தது எனவும் கூறியுள்ளார். இந்திய வீரர்களை வைத்து, ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து போரிட்ட நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், 1946ல் இந்திய பெருங்கடலையே முடக்கி, ஆங்கிலேயர்களின் கப்பற்படையை தோற்கடித்தார். அப்போது ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்வதறியாது தவித்தனர். இனியும் இந்தியாவில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்பதால்தான், 1947ல் இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. இந்திய சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் நேதாஜி. ஆனால், அவரைப் பற்றி நாம் பெரிதும் பேசுவதில்லை. இந்திய சுதந்திர வரலாற்றில், நேதாஜி போன்றோரை நாம் எப்படி இருட்டடிப்பு செய்ய முடியும்? நம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில், நேதாஜியின் பங்களிப்பு பற்றி இனி ஆராய்ச்சி செய்து, படிக்கத்தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.