பாடாலூர்: சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று தமிழ் ஆண்டான குரோதி வருடம் முடிந்து ஸ்ரீ விசுவாவசு வருடம் பிறந்தது. இதையொட்டி உலகம் முழுதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு தமிழ் வருட பிறப்பான இன்று காலை பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கியது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியின் வழியாக மாரியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்தும் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.