நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை: பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின
சென்னை: ஒன்றிய பாஜ அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா, மேற்குவங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பொதுவேலைநிறுத்தம் வெற்றி பெற்றது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. எனினும் பஸ், ஆட்டோ, ரயில்கள் வழக்கம்போல் இயங்கின. இதனால் தமிழகத்தில் பொதுவேலைநிறுத்தத்தால் பெரிய பாதிப்பு இல்லை. சென்னையில் அண்ணா சாலை தாராப்பூர் டவர், பிராட்வே பேருந்து நிலையம், எல்.ஐ.சி, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மின் துறை ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிதித்துறை, வங்கி துறை, எல்.ஐ.சி பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு பொருளாதார கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. மோடி அரசு ஒரு சில வசதி படைத்தவர்களுக்கு மட்டும் சாதகமாக உள்ளது. ஆனால், அது தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைகின்றன.
விலைவாசியை கட்டுப்படுத்தாமல் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகமாகியுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்க்கிறோம். இந்தியா வளர்ச்சிப்பெற்ற நாடாக மாறவேண்டும் என்றால், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் இருக்க வேண்டும். தொழிலாளர்கள் தான் இந்தியாவை பொருளாதார நாடாக, வல்லரசாக மாற்ற முடியும். எனவே தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் பொதுவேலைநிறுத்தத்தால் பெரிய பாதிப்பு இல்லை. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அதேபோல் ஆட்டோக்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டன. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரளா: கேரளாவில் இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோ, டாக்சிகள், லாரிகள் உள்பட எந்த வாகனங்களும் ஓடவில்லை. திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு உள்பட பல பகுதிகளில் பணிக்கு வந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆட்டோ, டாக்சி, பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் பாதிப்படைந்தனர். இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.
திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் 4600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 475 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். பஸ்கள் வழக்கம் போல ஓடும் என்றும், பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறியிருந்தார். ஆனால் அமைச்சரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் பெரும்பாலான ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. கேரளாவில் இருந்து நாகர்கோவில், கோயம்புத்தூர், பழனி, பெங்களூரு உள்பட வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் நேற்று செல்லவில்லை. ரயில், மெட்ரோ ரயில் மற்றும் விமான போக்குவரத்து வழக்கம் போல இயங்கின. வெளியூர்களில் இருந்து ரயில்களில் வந்த பயணிகள் தங்களது வீடுகளுக்கு செல்ல வாகனங்கள் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர். வாகனங்கள் எதுவும் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் கேரளாவில் அனைத்து பகுதிகளிலும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டம் காரணமாக பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. பல கடைகள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க மாநில அரசு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்தது. இதனால் மறியலில் ஈடுபட முயன்ற தொழிற்சங்கத்தினரை போலீசார் தடுத்ததால் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதே போல, ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. ஜார்க்கண்டில் சுரங்கம், வங்கிகள் மற்றும் பிற அரசு சேவைகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் பேரணி, சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. ஒடிசாவின் புவனேஸ்வரில் தொழிற்சங்கத்தினர் பல இடங்களில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாம், மேகாலாயாவில் சுற்றுலா டாக்ஸி சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மத்திய பிரதேசத்தில் 40,000 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கி சேவைகள் முடங்கின. ராஜஸ்தானிலும் பெரும்பாலான வங்கிகள் செயல்படவில்லை.
அசாமில் வணிக வாகனங்கள் ஓடவில்லை. தேயிலை தோட்ட தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அரியானாவில் ஹிசார், பிவானி, கதிலால், குருஷேத்ரா போன்ற நகரங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதுதவிர, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பந்த் போராட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. டெல்லியில் கன்னாட்பிளேஸ் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பகுதிகள் வழக்கம் போல் செயல்பட்டன. ஜந்தர் மந்தரில் மட்டும் போராட்டங்கள் நடந்தன.