Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்தியமங்கலம் அரசு கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் வல்லுனர் குழு கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்து கல்லூரியின் கல்வித்தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தர மதிப்பீடுகள் செய்வதற்கான கள ஆய்வினை மேற்கொண்டனர். இக்குழுவிற்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தேவி அகல்யா பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் பேராசிரியர் அசோக்குமார் தலைவராகவும், ஒடிசா மாநிலத்தின் ஜி.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுதன் சூ சேகர்ராத் ஒருங்கிணைப்பாளராகவும், மகாராஷ்டிரா மாநிலத்தின் டாக்டர். அம்பேத்கர் கல்லூரி முதல்வர் முனைவர் பிரல்கட் பவார் உறுப்பினராகவும் செயல்பட்டு கல்லூரியின் கல்வி சார்ந்த அனைத்து அடிப்படை கூறுகளையும் இரண்டு நாட்கள் நேரில் ஆய்வு செய்ய வருகை புரிந்திருந்தனர். இந்நிகழ்வின் முதல் நாளில் கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் கல்லூரியின் செயல்பாடுகள், கற்றல் கற்பித்தல் முறை, பாடத்திட்டம், மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் ஆகியன குறித்து விளக்கக்காட்சி மூலம் வல்லுனர் குழுவிற்கு எடுத்துரைத்தார். கல்லூரியின் அடிப்படை வசதிகள், உள்தர மேம்பாடு, கற்றல் கற்பித்தல் முறைகளை மேம் படுத்துவதற்கான எதிர்கால திட்டங்கள் ஆகியன குறித்து கல்லூரியின் உள்தர உறுதியளிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பொங்கியண்ணன் எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து துறைத்தலைவர்களும் தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகள், பாடத்திட்டங்கள். மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம், துறை சார்ந்த பாடங்களில் உள்ள உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் தனித்தனியே விளக்கக்காட்சிகள் மூலமாக எடுத்துரைத்தனர். இதனை அடுத்து, இக்குழுவானது கல்லூரியின் அனைத்து துறைகள், நூலகம், அலுவலகம், உடற்கல்வி மையம், ஆய்வகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுக்கு நேரில் சென்று தர மேம்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், முன்னாள் இந்நாள் மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கான கூட்டம் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரிடமும் இக்குழுவானது கலந்துரையாடல் செய்து கல்லூரியின் செயல்பாடுகள், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளின் தரம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்து மதிப்பீடுகள் செய்தனர். முதல் நாள் நிகழ்வின் நிறைவாக கல்லூரியின் சார்பில் மாணவ-மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்து வல்லுநர் குழுவிற்கு காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும், 2ம் நாளில் வல்லுனர் குழு கல்லூரியின் அனைத்து அடிப்படை கூறுகளையும் தங்களது ஆய்வுகளின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்து அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது. மேலும், கல்லூரி முதல்வர் மற்றும் உள் தர உறுதியளிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களிடம் நேர்காணல் செய்து இக்குழுவானது தங்களது மதிப்பீடுகள் மற்றும் பரிந்துரைகளை தேசியத்தர மதிப்பீட்டு குழுவின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கும் வகையில் அறிக்கை தயார் செய்தனர். இந்த, 2 நாட்கள் வல்லுனர் குழு வருகையின் நிறைவாக, முதல்வர் தலைமையில் நடைபெற்ற மதிப்பாற்றுக் கூட்டத்தில் இவ்வல்லுநர் குழுவானது கல்லூரியின் மேம்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்து தங்களது ஆலோசனைகளை பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கினர். வல்லுநர் குழுவின் இந்த 2 நாள் கள ஆய்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதியியல் துறை இணை பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் குழு ஏற்பாடு செய்திருந்தது.