எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது?: தேசிய திரைப்பட விருதுகள் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம்
சென்னை: இந்தியாவில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. 2023ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 'உள்ளொழுக்கு' சிறந்த மலையாள படமாக தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 'தி கேரளா ஸ்டோரி' என்ற மலையாள மொழி படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 71வது தேசிய திரைப்பட விருது விருதுகள் குழுவுக்கு நடிகை ஊர்வசி கேள்விகளை எழுப்பியுள்ளார். ஷாருக்கானுக்கு எந்த அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது என்றும், விஜயராகவன் எப்படி துணை நடிகரானார் என்றும் ஊர்வசி கேள்வி எழுப்பினார். விஜயராகவனுக்கு சிறப்பு விருது கொடுத்திருக்கலாமே என்றும், அவரது சினிமா அனுபவத்தை விருது தேர்வுகுழு ஆராய்ந்ததா என்றும் ஊர்வசி சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
''உள்ளொழுக்கு' படத்துக்காக எனக்கும், 'பூக்காலம்' படத்துக்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகை, நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டன. எங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை?. நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு தருவதை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என சொல்வது சரியல்ல. அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமாக கருத முடியாது என தேசிய திரைப்பட விருதுகள் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.