சென்னை: இந்தியனாக எனது கடமையை செய்ய உள்ளேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கமல்ஹாசன், நாளை நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கிறார். இந்நிலையில் டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது; இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். எனது கன்னிப் பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது; தமிழக மக்களின் வாழ்த்துகளோடு உறுதிமொழி ஏற்று, டெல்லியில் எனது பெயரை பதிவுசெய்ய உள்ளேன். சில விஷயங்கள் இங்கு பேசுவது போல அங்கு பேசக்கூடாது. அங்கு பேசுவது போல இங்கு பேசக்கூடாது. எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” என்று கூறினார்.