மூணாறு: மூணாறில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பால் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் பலியாகினர்.கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வானிலை மையம் சார்பில் நேற்று முதல் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிவப்பு எச்சரிக்கைக்கு நிகராக மழைப் பொழிவு இருக்கும் என மாநில பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் மலைச் சரிவு பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூணாறு-தேவிகுளம் கேப் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முதிரப்புழை, தேவியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் முதல் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கொச்சி-தனுஷ்கோடி, அடிமாலி-குமுளி நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இரவு, பகலாக சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தபோது, தேனி அருகே கே.ஜி. பட்டியைச் சேர்ந்த சுதா (50) குமுளி அருகே சக்குப்பள்ளம் ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரக்கிளை ஒடிந்து அவர்மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குமுளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மூணாறு தாவரவியல் பூங்கா அருகே, பழைய அரசு கல்லூரி கட்டிட பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்தது.
அப்போது அந்த வழியாகச் சென்ற லாரி மண் சரிவில் சிக்கியது. லாரியில் இருந்த ஒருவர் வெளியே வந்து அக்கம்பக்கதினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினருடன், உள்ளூர்வாசிகளும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மண்ணுக்குள் சிக்கியிருந்த லாரி ஓட்டுநர் கணேசன் என்பவரை டாட்டா ஹை ரேஞ்ச் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார்.