போடி: மூணாறு மலைச்சாலையில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் போக்குவரத்து துவங்கியது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதில் கடந்த 26ம் தேதி, தேவிகுளம் பகுதியில் உள்ள தாவரவியல் பூங்கா அருகில், பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து பேருந்துகள் தேவிகுளத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு உள்ள சின்னக்கானல்-சூரியநெல்லி பிரிவு வரை சென்று வந்தன.
மேலும் பாதிப்புக்குள்ளான பகுதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து தேவிகுளம்-மூணாறு சாலையில் போக்குவரத்து துவங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.