Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பை ரயில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஒருங்கிணைப்பு இல்லாததால் புலனாய்வில் படுதோல்வி?: அதிர வைத்த நீதிமன்ற தீர்ப்புகள்

புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில், புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக் குறைபாடுகளால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, மும்பையின் புறநகர் ரயில்களில் 11 நிமிட இடைவெளியில் நிகழ்ந்த ஏழு குண்டுவெடிப்புகளில் 189 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்), 12 பேரைக் குற்றவாளிகளாக அடையாளம் கண்டது. தொடர்ந்து, 2015ம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. ஆனால், மேல்முறையீட்டு விசாரணையின் போது, அரசுத் தரப்பு குற்றங்களை நிரூபிக்கத் தவறியதாகக் கூறி, மும்பை உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள், அவர்களை சித்திரவதை செய்து பெறப்பட்டதும், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுக்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இல்லாததும், வெடிகுண்டுகளின் வகையை உறுதிப்படுத்த முடியாததும் தோல்விக்குக் காரணங்களாக நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டன. எனினும், இந்த விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதேபோன்ற மற்றொரு பின்னடைவு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ல் மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில், பாஜக முன்னாள் எம்பி பிரக்யா தாக்கூர், ராணுவ அதிகாரி காந்த் புரோஹித் உள்ளிட்ட 7 பேரும் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் பிரக்யா தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக ஆரம்பகட்ட குற்றப்பத்திரிகையில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு கூறியிருந்தது.

ஆனால், பின்னர் வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை, பிரக்யா உள்ளிட்ட சிலருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டது. சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றவையாக இருப்பதாலும், சதித்திட்டம் நிரூபிக்கப்படாததாலும் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேற்கண்ட இரண்டு முக்கிய குண்டுவெடிப்பு வழக்குகளிலும், விசாரணை அமைப்புகள் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் புலனாய்வு நிர்வாகத்தில் பெரும் குளறுபடிகள் இருந்தது அம்பலமாகியுள்ளது. மாலேகான் வழக்கில், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கும், தேசிய புலனாய்வு முகமைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததும், ஆரம்பகட்ட ஆதாரங்களை தேசிய புலனாய்வு முகமை நிராகரித்ததும் விசாரணையை நீர்த்துப் போகச் செய்தது. மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலோ, சித்திரவதை மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களும், தொடர்பற்ற ஆதாரங்களும் நீதிமன்றத்தில் வழக்கை பலவீனமாக்கின.

தீவிரவாத வழக்குகளுக்குத் தேவையான துல்லியமான புலனாய்வு மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தோல்வி, அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஊடகங்களின் தலையீடு போன்றவை புலனாய்வின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. இத்தகைய தொடர் தோல்விகள், இந்தியாவின் தீவிரவாத விசாரணை அமைப்புகளின் திறனை மேம்படுத்தி, சீர்திருத்த வேண்டியதன் அவசரத் தேவையை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உணர்த்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.