திருச்சி: முக்கொம்புக்கு இன்று காலை நிலவரப்படி 1.21 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை இந்தாண்டு 4வது முறையாக கடந்த 25ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையில் இருந்து காவிரியில் நேற்று முன்தினம் காலை 45,400 கன அடி, அன்று மாலை 58,742 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதையொட்டி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து நேற்று முன்தினம் காவிரியில் 22,150 கன அடி, கொள்ளிடத்தில் 29,984 கன அடி, அய்யன், பெருவளை, புள்ளம்பாடி ஆகிய 3 வாய்க்கால்களில் மொத்தம் 1,060 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது.நேற்று காலை மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் காவிரியில் 1.05 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே முக்கொம்புக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முக்கொம்பில் இருந்து காவிரியில் 22,350 கன அடி, கொள்ளிடத்தில் கூடுதலாக 43,664 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் முக்கொம்புக்கு தண்ணீர் வரத்து இன்று 1 லட்சம் கன அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி முக்கொம்புக்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 385 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து கொள்ளிடத்தில் 92,602 கன அடி, காவிரியிர் 27783 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.கல்லணைக்கு இன்று காலை நிலவரப்படி 25,133 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கல்லணையில் இருந்து காவிரியில் 7,508 கன அடி, வெண்ணாற்றில் 8,506 கன அடி, கல்லணை கால்வாயில் 3514 கன அடி, கொள்ளிடத்தில் 5605 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் மட்டும் 98,207 கன அடி தண்ணீர் செல்கிறது.
கரூர், தஞ்சை, அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் கரைகளில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.