Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

5 ஆண்டில் 150 பேரை இடைநீக்கியது போன்று இனிமேல் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யாதீங்க: ஓம் பிர்லாவுக்கு எதிர்கட்சி எம்பிக்கள் அறிவுரை

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டில் 150 பேரை இடைநீக்கியது போன்று இனிமேல் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யாதீர்கள் என்று ஓம் பிர்லாவுக்கு எதிர்கட்சி எம்பிக்கள் அறிவுரை கூறினர். மக்களவை சபாநாயகராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘இரண்டாவது முறையாக சபாநாயகர் நாற்காலியில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். உங்களையும், மக்களவையும் வாழ்த்துகிறேன். சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள், இந்த அவையின் மூலமாக சாத்தியமாகி உள்ளது. ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தில் பல மைல்கற்கள் உள்ளன. 17வது லோக்சபாவின் சாதனைகளால் பெருமிதம் கொள்கிறோம்.

உங்களது அனுபவத்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களை நீங்கள் வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறோம்’ என்றார். ெதாடர்ந்து தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) எம்பி சுப்ரியா சுலே பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினீர்கள். ஆனால் எனது சகாக்களான 150 எம்பிக்களை நீங்கள் தற்காலிக இடைநீக்கம் செய்த போது, உங்கள் மீது எங்களுக்கு வருத்தம் இருந்தது. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இடைநீக்கம் செய்வது குறித்து கனவில் கூட நினைக்க வேண்டாம். எப்போதும் நாங்கள் விவாதத்திற்கு தயாராக உள்ளோம்’ என்றார். அதன்பின் சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி பேசுகையில், ‘இரண்டாவது முறையாக பதவியேற்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு வாழ்த்துக்கள். ஆனால் அவருக்கு எதிராக ஒரு வேட்பாளர் களத்தில் இருந்தார் என்பது வரலாற்றில் குறிப்பிடப்படும்.

அதை பாஜகவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும்’ என்றார். தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘எவ்வித பாகுபாடுமின்றி தாங்கள் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமவாய்ப்பும், மரியாதையும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். பாரபட்சமில்லாமல் இருப்பதுதான் மகத்தான பொறுப்பாக இருக்க முடியும். எந்தவொரு எம்பியின் குரலையும் நசுக்க மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று பேசினார். இவ்வாறாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூத்த எம்பிக்கள், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.