21ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டம்: பீகார், டிரம்ப் விவகாரத்தால்அனல் பறக்கும்
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்த பேச்சு போன்ற விவகாரங்களால் அவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் இரு அவைகளிலும் 21 அமர்வுகள் நடக்க உள்ளன. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்ட் 12 முதல் 18ம் தேதி வரை விடுமுறை விடப்படும்.
இக்கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, புவிசார் பாரம்பரிய தளங்கள் மற்றும் புவிசார் நினைவுச்சின்னங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா ஆகியவை அடங்கும்.
மேலும், மணிப்பூர், ஜிஎஸ்டி திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் விதிகள் திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவன திருத்த மசோதா மற்றும் வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதுதவிர, கடந்த பிப்ரவரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட வருமான வரி மசோதாவும் மீண்டும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்குழு தனது அறிக்கையை கூட்டத்தொடரின் முதல் நாளில் சமர்பிக்க உள்ளது.
இந்த அலுவல்களுக்கு மத்தியில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவருவது போன்ற பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இவ்விரு விவகாரங்களால் இரு அவைகளில் கடும் அனல் தெறிக்கும் சம்பவங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேன்டீன் மெனுவில் சத்தான உணவுகள்
உடல் பருமன் உலகளாவிய சவாலாக மாறியிருக்கும் நிலையில், நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட உள்ள புதிய மெனு பட்டியலில் ஊட்டச்சத்து நிரம்பிய சத்தான உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவின் வேண்டுகோளின் பேரில், ராகி தினை இட்லி மற்றும் சோளம் உப்புமா முதல் பாதாம் பருப்பு சில்லா மற்றும் காய்கறிகளுடன் வறுத்த மீன் வரை அத்தனையும் எண்ணெய் குறைவான, வேக வைத்த உணவுகளாக வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு உணவும் கார்போஹைட்ரேட்டுகள், சோடியம் மற்றும் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, புரதம் என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் வகையில் கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.