திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் திருவாரூர் கட்சி அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கும் வகையில் அரசுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் என அனைத்து தரப்புக்கும் எதிரான செயல்களை செய்து வரும் ஒன்றிய அரசு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் மோடியும், அமித்ஷாவும் ஆட்டுவிக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை போல் இருந்து வருகிறார். புதிய வேளாண் சட்டங்களுக்காக நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்ததன் காரணமாக தான் அதனை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களுக்கு எதிரான சட்டங்களை அரசு கொண்டு வந்தால் அதனை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தவில்லை என கூறும் பழனிசாமி எதிர்க்கட்சியாக இருந்து நான்கரை ஆண்டு காலத்தில் எத்தனை போராட்டங்கள் நடத்தியுள்ளார் என நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதிமுக கூட்டணியில் அதிமுகவும், பாஜவும் மட்டுமே இருந்து வருகிறது. கூடுதலாக வாசன் இருந்து வருகிறார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என அமித்ஷா கூறி வருவது அதிமுக பலவீனப்படுத்தப்பட்டு வருவதை காண்பிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் நேரத்தில் திமுகவிடம் நிதி பெற்றது தொடர்பாகவும் எடப்பாடி பேசியுள்ளார். இதுதொடர்பாக 2019ம் ஆண்டு முதல் ஒரு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்காக பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் திமுகவின் தேர்தல் செலவுக்காக மட்டுமே தொகை பெறப்பட்டது. அதுவும் வங்கி கணக்கு மூலம் தொகை பெறப்பட்டு செலவு விவரம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி குறைகள் கேட்பது குற்றமா என்பதை பழனிசாமி விளக்க வேண்டும். பெண்கள் குறித்து சீமான் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார். பொது இடங்களில் மரியாதையுடனும், நாகரிகத்துடனும் எப்படி பேச வேண்டும் என்பதற்கு அவர் பயிற்சி எடுத்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.