Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோடி, அமித் ஷா, நட்டாவுடன் யோகி 3 மணி நேரம் பேசியது என்ன?: உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பு

லக்னோ: மோடி, அமித் ஷா, நட்டாவுடன் முதல்வர் யோகி 3 மணி நேரம் பேசியதால் உத்தரபிரதேச அரசியலில் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. கட்சியின் முக்கிய வாக்கு வங்கிகளான ஓபிசி மற்றும் தலித் வாக்குகளின் சரிவு, கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறார்.

இதுமட்டுமின்றி, தற்போது அமைச்சர்களாக இருக்கும் நந்தகோபால் நந்தி, சஞ்சய் நிஷாத் போன்றோர் அதிகாரிகளின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். கூட்டணிக் கட்சியான அனுப்பிரியா பட்டேலின் கட்சியும் அதிருப்தியும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், 2027 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள புதிய மாநிலத் தலைவரை நியமித்து, கட்சியைப் புனரமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜகவின் தேசியத் தலைமை உள்ளது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று திடீரென டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. வரும் அக்டோபரில் திறக்கப்பட உள்ள ஜேவர் விமான நிலையத் திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைப்பதற்கான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் பல முக்கிய அரசியல் காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது, புதிய மாநிலத் தலைவர் நியமனம், அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பெரிய மாற்றங்கள், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு மற்றும் நிர்வாக ரீதியான மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளுக்குப் பிறகு உத்தரபிரதேச அரசியலில் மாற்றங்கள் உறுதியாக இருந்தாலும், அது எப்போது நடக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.