Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கருத்தை திரித்து கூறி ஆதாயம் தேட முயற்சி; நவீன ‘கோயபல்ஸ்’ மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை:

ராஜஸ்தானில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, ஆதாரமற்ற அவதூறு கருத்தை சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமாக கூறியிருக்கிறார். கடந்த 2006ம் ஆண்டு டிச. 9ம் தேதி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தின் பேசியதன் முன்பகுதியையும், பின்பகுதியையும் விட்டுவிட்டு இடையில் சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையோடு இணைத்து திரிபு வாதங்களை செய்திருக்கிறார்.

இதுகுறித்து அன்று முதல்வராக இருந்த மோடி சர்ச்சையை கிளப்பிய போது மறுநாளே பிரதமர் அலுவலகம் முழு பேச்சையும் வெளியிட்டு விளக்கத்தை வழங்கி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகிற போது எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், சிறுவர்கள் என அடிநிலையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பொதுவாக குறிப்பிட்டதை முஸ்லிம்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டுமென்று கூறியதாக உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்தோடு கருத்தை திரித்து பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

அன்றே மறுக்கப்பட்ட செய்தியை 18 வருடங்கள் கழித்து மீண்டும் பிரதமர் மோடி கருத்தை திரித்து கூறி அரசியல் ஆதாயம் தேட தேர்தல் நேரத்தில் முற்பட்டிருக்கிறார். இதன் மூலம் அரசமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை பிரதமர் மோடி அப்பட்டமாக மீறியிருக்கிறார். அவரது இந்தப் பரப்புரையின் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்திருக்கிறது. இத்தகைய கோயபல்ஸ் பிரசாரத்தின் மூலம் விரக்தியின் விளிம்பில் அரசியல் ஆதாயம் தேட முற்படும் பிரதமர் மோடிக்கு இனி வருகிற தேர்தல்களில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.