Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மு.க.முத்து அவர்கள் தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க.முத்து அவர்கள். பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.

அவரது மறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி,மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

* அன்புமணி ராமதாஸ்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரரும் திரைப்பட நடிகருமான மு.க. முத்து அவர்கள் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

* ஓ. பன்னீர்செல்வம்

கலைஞர் அவர்களின் மூத்த மகனும், முதலமைச்சர் அவர்களின் சகோதரரும், திரைப்பட நடிகருமான மு.க.முத்து அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். மு.க. முத்து அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

* எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

மு. கருணாநிதி அவர்களுடைய மூத்த மகன் மு.க. முத்து அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர் மு.க. முத்து அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்