சென்னை : “தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், " 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
அவர் கொடுத்த "மதயானை" எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்! நன்றி தலைவா "இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் கலைஞர் கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்ட பதிவையும் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். கலைஞர் வெளியிட்ட பதிவில், "புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?
புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, "கல்வி சிறந்த தமிழ்நாட்டை" நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை! ஜெயலலிதா அரசு, நமது மாநிலத்திற்குச் சிறிதும் பொருந்தாத இந்தப் பிரச்சினையை எச்சரிக்கையோடு கையாளுமா? தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுமா?
தமிழக அரசு, பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும், ஆசிரியர் மத்தி யிலும், மாநில உரிமைகளிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ஏராளமான பிரச்சினைகளை உள்ளடக்கிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே எதிர்க்கட்சிகளுக்குப் போதிய வாய்ப்பளித்து, ஒரு நாள் முழுதும் விவாதித்து, தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்; அந்தத் தீர்மானத்தில் "கல்வி"யை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தக்கக் காரண விளக்கங்களுடன் அழுத்தமான கோரிக்கையும் இடம் பெற வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.