அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு : முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
சென்னை : அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் (ஆக.1) அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் இந்தியாவின் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பாக ஜவுளி மற்றும் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில், இந்தியா மீதான அமெரிக்காவின் 25% வரி விதிப்பு இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். ட்ரம்ப் - மோடியின் நட்புறவில் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைளுக்கு இடமில்லையா? என்று விமர்சித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா வர்த்தக கூட்டணி தொடர்பான பிரதமர் மோடியின் லட்சியம் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், நாட்டின் வர்த்தக நலன்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.