சென்னை - விழுப்புரம் - வேலூர், கோவை - சேலம் ஆகிய 3 வழித்தடங்களில் சாத்தியக்கூறு ஆய்வுசெய்ய ஆலோசகர் நியமனம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
சென்னை: சென்னை - விழுப்புரம் - வேலூர், கோவை - சேலம் ஆகிய 3 வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வு செய்ய ஆலோசகர் நியமனம் செய்து மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களை அவற்றின் அண்டை பிராந்திய மையங்களுடன் இணைக்கும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு நெட்வொர்க்குகளை வரையறுக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரே நேரத்தில் மூன்று சாத்தியக்கூறு ஆய்வுகளை தொடங்கியுள்ளது.
பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு, என்பது அரை அதிவேக, அதிவேக (160-200 கிமீ, மணி மற்றும் அதற்கு மேல்), ரயில் அடிப்படையிலான அமைப்பாகக் கருதப்படுகிறது. இது நகரங்களுக்கு இடையேயான தூரங்களை 30-60 நிமிட பயண நேரங்களில், சாலைப் பயணத்தை விட மிக வேகமாக, அதிக பயணிகள் எண்ணிக்கையை கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் (170 கி.மீ.), சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் (140 கி.மீ.), கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் (185 கி.மீ.) இந்த மூன்று பணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனத்தை சாத்தியக்கூறு ஆய்வு ஆலோசகராக நியமித்துள்ளது. திட்டமிடப்பட்ட ஒவ்வொரு பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு வழித்தடங்களுக்கும் மாற்று வழித்தட விருப்பங்களை ஆலோசகர்கள் ஆய்வு செய்வார்கள். நிலையங்கள், பணிமனைகள் மற்றும் பிற போக்குவரத்து முறைகளுடன் எளிதாக மாறிச் செல்லும் இடங்கள் ஆகியவை இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த ஆய்வு வழித்தடங்கள் தரையில் இயங்க வேண்டுமா, உயர்த்தப்பட்டதா அல்லது சுரங்கப்பாதையில் இயங்க வேண்டுமா, நிலத் தேவைகள், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் தோராயமான திட்டச் செலவு ஆகியவற்றை தீர்மானிக்கும். பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு அருகிலுள்ள நகரங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளிலிருந்து நகர மையத்தை வேகமாக சென்றடைய அனுமதிப்பதன் மூலம் நகரத்தின் நெரிசலை குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு முயற்சி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் எதிர்கால நோக்குடன் அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளர் (தெற்கு) ராபர்ட் ராஜசேகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.