மருத்துவ படிப்பில் போலி சான்றிதழ் கொடுத்த 25 மாணவர்கள் மீது விரைவில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல்
சென்னை: மருத்துவ படிப்பில் சேருவதற்கு போலி சான்றிதழ் கொடுத்த 25 மாணவர்கள் மீது விரைவில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
2025-2026 ஆம் ஆண்டிற்கான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதற்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 25ம் தேதி வெளியாகி இருந்தது. 25ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியான நிலையில் அப்போது 25 பேர் போலி சான்றிதழ் வழங்கியதாகவும் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த 25 பேருக்கு அடுத்த 3 ஆண்டுக்கு மருத்துவப்படிப்பு படிக்க முடியாத அளவிற்கு தகுதி நீக்கம் செய்வதாகவும், ஓரிரு நாட்களுக்குள் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் தரப்பிலிருந்து எடுக்கப்படும் எனவும், 25 பேரின் விவரம் எந்த முறையில் அவர்கள் போலி சான்றிதழ் வழங்கி உள்ளனர் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு விதமான போலி சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
NRI என்ற கோட்டாவில் போலி இருப்பிட சான்றிதழ், போலி பிறப்பு சான்று, தூதரகத்திலிருந்து போலி சான்றிதழ் வழங்குவது போன்ற பல்வேறு வகையிலான சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும். அதை எந்தெந்த மாணவர்கள் எந்தெந்த போலி சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள் என்பது குறித்தான முழு விவரத்துடன் இருக்கக்கூடிய தகவலினை காவல்துறை ஆணையருக்கு வழங்க உள்ளனர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை காவல்துறை தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய நபர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை ஓரிரு நாட்களுக்குள் எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.