இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளுக்கான வாகனங்களை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக பேட்டரியால் இயங்கும் 40 மூன்று சக்கர வாகனங்கள் (BOV Vehicles) மற்றும் 12 சாலை பெருக்கும் இயந்திரங்கள் (E - Mechanical Sweeping Machines) ஆகியவற்றினை மேயர் ஆர்.பிரியா அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று (25.07.2025) கொடியசைத்து பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
இராயபுரம் மற்றும் வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உருவாகும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு M/s. Chennai Enviro Solutions Private Limited (Package-6) தானியங்கி வாகனங்கள் மூலம் உரிய இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படும். மண்டலம் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு மண்டலங்களில் 38.92 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மற்றும் 637.50 கி.மீ. சாலைகள் மற்றும் 30 வார்டுகள் உள்ளன. இவற்றில் 4,21,926 வீடுகள் உள்ளன. நாள்தோறும் சராசரியாக 0.655 கிலோ திடக்கழிவுகள் உற்பத்தியாகிறது.
வீடுகளிலிருந்து பிரித்தே சேகரிக்கப்படும் திடக்கழிவுகளைச் சேகரித்தல், தெருக்கள், சாலைகள் மற்றும் நடைபாதை சுத்தம் செய்யும் பணிகள், சாலையோர சாக்கடை மற்றும் கால்வாய்களில் இருந்து வரும் படிமண் கழிவுகளை சேகரித்தல் மற்றும் கடத்தல், பேரிடர் கழிவுகள், தோட்டக்கழிவுகள், வீட்டு அபாயகர கழிவுகள் (DHW) ஆகியவற்றை சேகரித்தல் மற்றும் புறப்படுத்தல், கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தல் மற்றும் குப்பை அகற்றும் பணிகள் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் இந்த இரண்டு மண்டலங்களில் இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, பேட்டரியால் இயங்கும் 1306 மூன்று சக்கர வாகனங்கள், தெருக்களை சுத்தம் செய்யும் 12 இயந்திர வாகனங்கள், 8 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட 6 குப்பை நெறிப்படுத்தும் வாகனங்கள் (Refuse Compactors), 14 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட 39 குப்பை நெறிப்படுத்தி வாகனங்கள், 1100 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பை நெறிப்படுத்தும் 4,005 குப்பைத் தொட்டிகள் (Refuse Compactor Bins), 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2,286 தெரு துடைப்பு குப்பைத் தொட்டிகள், குப்பைத் தொட்டிகளை கழுவும் 1,504 இயந்திரங்கள் (Bin Washers), தோட்டக்கழிவுகள் அகற்றும் 5 வாகனங்கள் (Horticultural Waste Removal Vehicles)), குப்பைத் தொட்டிகளை நகர்த்தும் 6 ஏந்தி இயந்திரங்கள் (Backhoe Loaders), பேருந்து சாலைகளுக்கான 1,036 குப்பைத் தொட்டிகள், 3 ஸ்கிட் ஸ்டியர் ஏந்திகள் (Skid Steer Loaders), சுத்தமாக்கப்பட்ட வழித்தட/பகுதிக்கான பேட்டரியால் இயங்கும் 6 வாகனங்கள் (Battery Operated Vehicles for Litter-Free Corridor/Area),
39 நிலைத்த குப்பை நெறிப்படுத்திகள் (Static Compactors), ஹாட் ஸ்பாட் (Hotspot) பகுதிக்கான 2 பெரிய வாகனங்கள் (HMV), 2 சிறிய வாகனங்கள் (LMV), திடமாக்கப்பட்ட காலக் கழிவுகளுக்கான 6 சிறிய வாகனங்கள் (LMV for Carcass Waste), வீட்டு அபாயகர கழிவுகளுக்கான 27 வாகனங்கள் (Domestic Hazardous Waste-LMV), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்யும் 5 LMV வாகனங்கள் மற்றும் 5 MUV வாகனங்கள் (Multi-Utility Vehicle), தோட்டக்கலை கழிவுகளுக்கான 6 LMV வாகனங்கள் மற்றும் முக்கிய சேவைகளுக்கான 5 LMV வாகனங்கள் இந்த மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்த இரண்டு மண்டலங்களிலும் வசிக்கும் 16,87,703 எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயன் அடைவார்கள்.