மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பொழிந்தது.
குறிப்பாக நகர் பகுதிகளில் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதேபோல் குத்தாலம், பாலாக்குடி, வில்லியநல்லூர், நீடூர், மணல்மேடு, பட்டவர்த்தி செம்பனார்கோயில், ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டையில் கடற்கரை பகுதியான அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 7 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை பெய்தது. தஞ்சையில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. பாபநாசம் அருகே வாழ்க்கை கிராமத்தில் மழையால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, இயக்கம் செய்யப்படாமல் இருந்த 1000 நெல்மூட்டைகளும், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 2 ஆயிரம் நெல்மூட்டைகளும் மழை நீரில் நனைந்தன. இதனை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.