Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா, செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை:பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னையில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொல்லும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பத்ரி, தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜாகனி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேசுகையில், “காசா பகுதியிலிருந்து வெளியேறி ரபா பகுதியில் கூடாரம் அமைத்து அகதிகளாக தங்கி உள்ள பாலஸ்தீன பொதுமக்கள் மீதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து தாக்கி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் கொந்தளித்து எழுந்துள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முற்றிலும் பயங்கரவாத இஸ்ரேலினால் அழிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் உச்சத்தை தொட்டுள்ளன. இஸ்ரேலின் அராஜகத்திற்கு எதிராக யூதர்களே போராடும் நிலைமையும் உருவாகியுள்ளது என்றால், பாலஸ்தீன மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலால் எவ்வளவு கொடுமையானது என உணரலாம்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், தலைமை நிலையச் செயலாளர் எம்.ஜைய்னுல் ஆபீதின், அமைப்பு செயலாளர்கள் மாயவரம் ஜெ.அமீன், புழல் சேக் முஹம்மது அலி, புதுமடம் ஹலீம், தலைமை பிரதிநிதி அப்துல் காதர், மாவட்ட தலைவர்கள் அபுபக்கர் கோரி, பனையூர் யூசுப், அலி, குணங்குடி முஹம்மது மொய்தீன், எல்.தாஹா நவீன், ரசூல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.