Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்கள் திரள் பேட்டியாளர், சமூக இயல் வல்லுநர் பணி வரும் 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப்பணியில் அடங்கிய மக்கள் திரள் பேட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலைப்பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்களை கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 8.12.2023 மற்றும் 10.2.2023 அன்று நடைபெற்றது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.2.2024 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மக்கள் திரள் பேட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலைப்பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் பதவிகளுக்கு மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 24ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். மேலும் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.