Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாரத்தான் வீரர் பவுஜா சிங் விபத்தில் உயிரிழந்த விவகாரம்: தப்பி ஓடியவர் கைது

அமிர்தசரஸ்: தடகள உலகில் ‘டர்பன் டொர்னாடோ’ என்று அழைக்கப்படும் பஞ்சாப்பை சேர்ந்த மூத்த மாரத்தான் வீரர் பவுஜா சிங் (114). தள்ளாத வயதிலும் தளராமல் மாரத்தானில் பங்கேற்று பலருக்கு உத்வேகத்தின் சின்னமாக விளங்கினார். சமீபத்தில், பஞ்சாப் ஆளுநருடன் இணைந்து ‘போதையில்லா பஞ்சாப்’ விழிப்புணர்வுப் பேரணியில் கூட உற்சாகத்துடன் பங்கேற்றார். இவரது வாழ்க்கை வரலாற்றை, எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ‘தி டர்பன் டொர்னாடோ’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

இந்நிலையில் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பியாஸில், நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாகத் தேடிய நிலையில் அம்ரித்பால் சிங் தில்லான் என்பவரை அவரது சொந்த ஊரான கர்தார்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார்.

அண்மையில் தான் கனடாவில் இருந்து சொந்த ஊருக்கு தில்லான் வந்துள்ளார். விபத்து நடைபெற்ற பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவில் இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போது விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் பதிவு எண்ணையும் அடையாளம் போலீசார் கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில் தில்லான் கைது செய்யப்பட்டார். பவுஜா சிங் மீது காரை ஏற்றியதையும் தில்லான் ஒப்புக்கொண்டுள்ளார். தில்லானுக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும், அவரது தாயார் கனடாவில் வசிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பிஎன்எஸ் பிரிவுகள் 281 கீழ் பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் 105 கீழ் கொலை வழக்கு ஆகியவற்றில் தில்லான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

* பவுஜா சிங் யார்?

உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்று அழைக்கப்பட்ட பவுஜா சிங் கடந்த 1911 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது பல சாதனைகளைப் படைத்ததன் மூலம், மாரத்தான் ஓட்டத்தை முடித்த முதல் நூற்றாண்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். லண்டன், நியூயார்க் மற்றும் ஹாங்காங்கில் நடைபெற்ற பிரபலமான மாரத்தான்கள் உட்பட பல இடங்களில் அவர் ஓடினார். 2011 ஆம் ஆண்டு அவருக்கு 100 வயதான போது அந்த ஓட்டத்திலும் பங்கேற்றார். மேலும் அவர் தனது வயதினருக்கான பல உலக சாதனைகளை முறியடித்தார். கடந்த ஆண்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்புவதற்காக பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவுடன் நடந்த நடைப்பயணத்தில் பவுஜா சிங் கலந்து கொண்டார்.