‘மன் கி பாத்’ நிகழ்ச்சியால் வெடித்த மோதல்; பாஜக - கூட்டணி கட்சி தொண்டர்கள் மோதல்: திரிபுராவில் பயங்கரம்
கோவாய்: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியால் திரிபுராவில் பாஜக - கூட்டணி கட்சி தொண்டர்கள் மோதிக் கொண்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. திரிபுராவில் ஆளும் பாஜக - திப்ரா மோதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவாய் மாவட்டம் ஆஷாராம்பாரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட ஒரு வீட்டில், நேற்று பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’-ஐ கேட்பதற்காக சுமார் 30 பாஜகவினர் கூடியிருந்தனர். அப்போது, திப்ரா மோதா கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் அங்கு வந்தனர்.
தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 8 பைக்குகள், 2 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காயமடைந்த இரு கட்சியின் தொண்டர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலை உறுதிப்படுத்தியுள்ள திப்ரா மோதா நிறுவனர் பிரத்யோத் மாணிக்யா தேப்பர்மா, சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘திரிபுராவில் அரசியல் வன்முறை வேண்டாம். அரசியல் கொடிக்காக தொடர்ந்து நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், ஒருநாள் நமது நிலத்தை இழந்துவிடுவோம். மா.கம்யூ கட்சியில் இருந்து விலகி பாஜக மற்றும் திப்ரா மோதாவில் இணைந்த பலரே இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பாஜகவும் கவனமாக இருக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதலால், இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வருவதைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.