Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே... பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

Manmathan, Delhi Police, Arrest*5 ஆண்டுகளுக்கு பின் போலீசிடம் சிக்கி திருதிரு

புதுடெல்லி : சமூகவலைதளங்கள், திருமண வலைதளங்கள் மூலமாக 50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவரை 5 ஆண்டு வேட்டைக்குப் பிறகு டெல்லி போலீசார் பிடித்துள்ளனர்.2020ம் ஆண்டு, கொரோனா காலம். மக்கள் எல்லாம் உயிருக்கு பயந்து வீட்டில் முடங்கியிருந்த நேரம். மற்றவர்களை போல்தான், டெல்லியை சேர்ந்த முக்கிம் அயூப் கான் (38)என்பவரும் முடங்கிக் கிடந்தார்.

அதில், மனைவி, 3 பிள்ளைகள் முகத்தை பார்த்து பார்த்து அவருக்கு அலுப்பு ஏற்பட்டு விட்டது. ‘ச்சே... என்னடா வாழ்க்கை இது... ஏதாவது த்ரில்லிங்கா செய்யணுமே...’ என யோசனை தோன்றியது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதும், மனைவி, பிள்ளைகளை அம்போ என்று விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபலமான 2 திருமண வலைதளங்களில் 20க்கும் மேற்பட்ட பல்வேறு பெயர்களில் பதிவுகளை போட்டு, பெண்களை தேடினார். இதற்காக, ஒன்றிய அரசின் உயர் பதவி உட்பட பல்வேறு பெரிய பதவிகளில் இருப்பது போல், போலி அடையாள அட்டைகளை உருவாக்கினார். சமூக வலைதளங்களின் மூலமும் பெண்களுக்கு தூண்டில் போட்டார். இதன் மூலமாக, பல பெண்கள் அவரிடம் சிக்கினர்.

ஆனால், பெரிய பணக்கார பெண்களை மட்டுமே அவர் குறி வைத்தார். அதிலும், விதவைகள் அல்லது விவாகரத்து ஆன பெண்களையே தேர்ந்தெடுத்தார். இதன்மூலமாக, 6க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றினார். திருமணம் செய்வதாக அவர்களுக்கு ஆசை காட்டி, அவர்களின் பெற்றோரையும் சந்தித்து இனிக்க இனிக்க பேசி வலையில் வீழ்த்துவார். திருமணம் செய்யும் பெண்ணுடன் ஷாப்பிங் செல்வார்.

அங்கு விலை உயர்ந்த வாட்ச், நகைகள் போன்றவற்றை வாங்குவார். எல்லாவற்றையும் முடித்த பிறகு, பர்சை தேடுவார். ‘அய்யய்யோ... பர்ஸ் எங்க போச்சுன்னு தெரியலியே... டெபிட், கிரெடிட் கார்டு கூட பர்சுலதான் இருக்கு... இப்ப என்ன பண்றதுன்னு தெரியலியே...’ என்று கைகளை பிசைவார். அருகில் இருக்கும் மணப்பெண், ‘நான் தருகிறேன்’ என கூறி பணத்தை தருவார் அல்லது பெற்றோருக்கு போன் செய்து பணத்தை எடுத்து வரச் சொல்வார்.

அந்த பொருட்கள் கைக்கு கிடைத்ததும், அந்த ஊரில் இருந்து கம்பி நீட்டி விடுவார் அயூப்கான்.

இதுபோல் அவரிடம் ஏமாந்த பல பெண்கள் 2020ம் ஆண்டு முதல் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உட்பட பல்வேறு மாநில இவருக்கு வலைவீச தொடங்கினர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக போலீசாருக்கு அவர் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார். இறுதியாக, கடந்த வியாழக்கிழமை குஜராத்தில் உள்ள வதோதராவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் வருவதை டெல்லி போலீசார் கண்டு பிடித்தனர்.

அவருக்கே தெரியாமல் அவருடன் சாதாரண உடைகளில் போலீசாரும் அந்த ரயிலில் பயணம் செய்தனர்,.டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்து சேர்ந்ததும், அயூப்கானை சுற்றிவளைத்தனர். அவர்களை பார்த்ததும், ‘சிக்கி விட்டோம்’ என்பதை அறிந்து, பேச்சு மூச்சு இல்லாமல் அவன் சரணாகதி அடைந்து விட்டான். போலீசார் அவனிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காலக்கட்டத்தில் அவன் 3 பெண்களையும் திருமணம் செய்து, பணம், நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானதும் தெரிய வந்துள்ளது.