மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடல்பகுதியில் இன்று காலை ஆசிய அலைச்சறுக்கு போட்டிக்கான முதல் கட்ட பயிற்சிகள் துவங்கியது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 120 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். ஆசிய அலைச்சறுக்கு அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் சார்பில், மாமல்லபுரம் கடற்கரையில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 2025ம் ஆண்டுக்கான ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, சீனாவின் தைபே, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் உள்பட 20 நாடுகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரைக்கு இன்று காலை வெளிநாடுகளை சேர்ந்த சிலர் வந்து, கடலில் அலைச்சறுக்கு பலகைகள் மூலம் முதல்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா சார்பில் பங்கேற்கும் 12 பேரில், 8 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களும் இன்று முதல் அலைச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.