மகாராஷ்டிரா, மபி உள்ளிட்ட 6 மாநிலங்களில் ரூ.11,169 கோடி ரயில்வே திட்டங்கள்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ரூ.11,169 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மகாராஷ்டிரா,மபி, மேற்கு வங்கம், பீகார்,ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ரயில்வேயில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். 4 மாநிலங்கள்,13 மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு திட்டங்களும் ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை 574 கிமீ அதிகரிக்க செய்யும். நாக்பூர்- இட்டர்சி 4வது பாதை, அவுரங்காபாத்(சத்ரபதி சம்பாஜி நகர்)மற்றும் பர்பானி பாதை இரட்டிப்பாக்குதல், அலுவாபரி சாலை- நியூ ஜல்பைகுரி, டாங்கோபோசி மற்றும் ஜரோலி 3-வது, 4வது பாதை அமைக்கப்படும். இந்த திட்டங்கள் மூலம் ரயில் வழிதடங்களில் நெரிசலை குறைக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்துக்கு பின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,‘‘ 2025-26ம் ஆண்டு முதல் 2028-29ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு ரூ.2000 கோடியில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசின் துறைசார்ந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 13,288 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 2.9 கோடி உறுப்பினர்கள் பயனடைவர். இதை தவிர பிரதம மந்திரி கிசான் சம்பாதா யோஜனாவின் கீழ் உணவு பதப்படுத்தும் துறைக்கு ரூ.1920 கோடி கூடுதல் நிதி ஓதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.