சென்னை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 28ம் தேதி மக்களவையில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இந்தத் தாக்குதல் நடந்தபோது சவுதி அரேபியாவிலே இருந்த நம்முடைய பிரதமர் பயணத்திட்டத்தைக் குறைத்துக்கொண்டு நாடு திரும்பினார். நேரடியாக பஹல்காமுக்குச் செல்வார் காஷ்மீருக்குச் செல்வார் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் பீகாரில் தேர்தல் அணிவகுப்பில் கலந்துகொள்ளச் சென்றார்.எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது. உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும்தான் இருக்கிறது. சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பிரதமர் இந்த நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் என்றார்.கோவிலுக்கு வாருங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் கோவிலுக்கு வர இவ்வளவு பயப்படும் பிரதமரை இப்போதுதான் பார்க்கிறோம்" என்று ஒன்றிய அரசைக் கண்டித்துப் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, "தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகுதான் ஒரு உதவியோ தகவலை அரசுக்குக் கிட்டி இருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது?இது மூன்றடுக்குப் பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி சி.ஆர்.பி.எஃப்-ன் தோல்வி. ஜம்மு காஷ்மீர் காவல் துறையினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்கப் போவது அதிகாரிகளா, அமைச்சரா? ஒரே தேசம், ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்வீர்களே... உங்கள் பிரதமர் பொறுப்பேற்கப் போகிறாரா? நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எல்லா நிகழ்வுகளுக்கும் நேருவிலிருந்து, மன்மோகன் சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என்பீர்களே இப்போது யாரைக் கை காட்டுவீர்கள்?" என்று ஒன்றை அரசை நோக்கிக் கேள்விகளை அடுக்கியிருந்தார்.சு.வெங்கடேசனின் இந்தப் பேச்சு பேசுபொருளாகியிருந்த நிலையில் அன்று இரவே மர்ம நபர், சு.வெங்கடேசன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசலாம்? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது என மிரட்டினர்.
நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்” என்று கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு இணையம் மூலம் சு.வெங்கடேசன் புகார் அனுப்பியுள்ளார். இந்நிலையில் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக,பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் மாநிலங்களவை எம்.பி-யாகியிருக்கும் கமல் ஹாசன் இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறுகையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இந்திய மக்களின் மனங்களில் கொந்தளித்துக்கொண்டிருந்த கேள்விகளை ஆற்றலுடன் வெளிப்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கருத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ஜனநாயக விரோத சக்திகளின் ஆயுதம் வன்முறை. மக்கள் பிரதிநிதியை அவரது கடமையைச் செய்ய விடாமல் அச்சுறுத்தும் இத்தகைய கோழைகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். நண்பர் சு.வெங்கடேசனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.