சென்னை: மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அண்மையில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி இடித்து சென்ற சம்பவம் பரபரப்புக்குள்ளானது. இது குறித்து அவர் பேசியபோது தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் இதற்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் தன கார் மீது மோதியவர் குல்லா அணிந்திருந்தார்கள் தாடி வைத்திருந்தார்கள் என்று கூறியிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினரிடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையிலேயே இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. அவரது வயதை காரணம் காட்டி அவரிடம் காவல்துறை நேரில் சென்று விசாரிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் கடந்த 20ம் தேதி சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி அவரது மடத்துக்கே சென்று தனது விசாரணையை தொடங்கினார். ஆனால் மதுரை ஆதின மடத்துக்கு சென்ற அவருக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என தெரிவித்தார்.
குறிப்பாக ஆதினமோ அல்லது ஆதீனத்தின் ஆதரவாளர்களோ யாரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதை அடுத்து அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் அவரது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று இன்றைய தினம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் அவரை காவல் துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அவரது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று காவல்துறையில் வாதம் முன்வைக்கப்பட உள்ளது.