Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பிய மத்திய பிரதேச பெண் நீதிபதி திடீர் ராஜினாமா: நீதித்துறை தன்னையே தோற்கடித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு

போபால்: மூத்த நீதிபதி மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பிய மத்திய பிரதேச பெண் நீதிபதி திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தால் கடந்த 2023ம் ஆண்டு, அதிதி குமார் சர்மா உள்ளிட்ட ஆறு பெண் நீதிபதிகள், ‘பணித்திறன் திருப்தியில்லை’ என்ற காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பின்னர், மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நான்கு பெண் நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தியபோதும், அதிதி குமார் சர்மா மற்றும் சரிதா சவுத்ரி ஆகியோரை நிராகரித்தது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதிதி குமார் சர்மாவின் பணிநீக்கம் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது எனக் கூறி, அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. இந்நிலையில், ஷாடோல் மாவட்ட சிவில் நீதிபதியான அதிதி குமார் சர்மா, கடந்த 28ம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘அளவுகடந்த அதிகாரம் கொண்ட மூத்த நீதிபதிக்கு எதிராக நான் பேசியதால், பல ஆண்டுகளாக தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன்.

நீதி கிடைக்காவிட்டாலும், என் தரப்பு வாதத்தையாவது கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் சட்டப்பூர்வமான அனைத்து வழிகளையும் பின்பற்றினேன். ஆனால், எனது துன்பத்திற்குக் காரணமானவர் விசாரிக்கப்படாமல், அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு சம்மன் அனுப்புவதற்குப் பதிலாகப் கவுரவ பதவி வழங்கப்பட்டது. எனவே, நான் இந்த நீதித்துறையில் தோற்கவில்லை; அமைப்புதான் என்னைத் தோற்கடித்துவிட்டது. நான் பழிவாங்கத் துடிக்கவில்லை; நீதிக்காகவே கதறினேன். எனக்காக மட்டுமல்ல, நான் பெரிதும் மதித்த இந்த நீதித்துறைக்காகவும் தான்.

எந்தவொரு பணி நியமனமோ, இழப்பீடோ, மன்னிப்போ ஆற்ற முடியாத காயங்களுடன் இங்கிருந்து செல்கிறேன். இந்தக் கடிதம், அது நுழையும் கோப்புகளை வாழ்நாள் முழுவதும் துரத்தட்டும். நீதிபதியாக அல்லாமல் மவுனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவராக பணியில் இருந்து விலகுகிறேன். நீதித்துறை என்னைத் தோற்கடித்துவிட்டது என்பதை விட, அது தன்னையே தோற்கடித்துக்கொண்டது என்ற கசப்பான உண்மையுடன் மட்டுமே செல்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தனக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்த பெண் சிவில் நீதிபதி சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டார். ஆனால் ‘இந்த நீதிமன்ற அமைப்புதான் என்னைத் தோற்கடித்துவிட்டது’ என்று அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம், இந்திய நீதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.