Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவை தேர்தலில் பாமக தனித்து போட்டி இல்லை; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு: பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!!

சென்னை: மக்களவை தேர்தலில் பாமக தனித்து போட்டி இல்லை; கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயல்பாகவே ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதிசெய்கிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை ஒன்றிய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகவே மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றிய அரசு பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நெருக்கடி நிலை காலத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அப்போது இது தற்காலிக நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் அரைநூற்றாண்டு ஆகப்போகும் நிலையில் இன்றுவரை அந்த 5 பொருட்களும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகள் மாறினாலும் கூட, மாநில அதிகாரத்தைப் பறிக்கும் போக்கு மட்டும் மாறவே இல்லை.

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கும், தமிழர்கள் தங்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் கருதிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டது ஆகிய அனைத்திற்கும் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணம் ஆகும். இந்த அநீதிக்கு எதிராக போராடவேண்டியது மாநிலக்கட்சிகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை பா.ம.க. மிகச்சரியாக நிறைவேற்றி வருகிறது.

நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்த காலங்களில் எல்லாம் மாநில சுயாட்சி உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி குரல்கொடுத்தும், போராடியும் வந்திருக்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் போர் முழக்கமிட்டு அதை சாத்தியமாக்கினார். அதற்கு முதன்மை காரணமாக இருந்தது பா.ம.க.வுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்ததுதான்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பட்டியலின மாணவர்கள், பழங்குடியின மாணவர்களுக்கு சமூக நீதி ஒதுக்கப்பட்டே வந்தது. மத்திய சுகாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இராமதாசு இருந்த போதுதான் மருத்துவர் அய்யா ஆணைப்படி, இந்திய சமூக அநீதியைக் களைந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினார்.

ஒட்டுமொத்த உலகமே போற்றக்கூடிய 108 அவசர ஊர்தித் திட்டம், உலகின் மிகப் பெரிய சுகாரத்திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கம், எய்ம்ஸுக்கு இணையான மருத்துவமனைகளை நாடு முழுவதும் திறக்கும் திட்டம், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் சட்டம், தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவற்றை மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்கள் கொண்டுவருவதற்கு காரணமும் மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்த வலிமைதான்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சராக இருந்த போது தான் தமிழ்நாட்டிற்கு மிக அதிக தொடர்வண்டித் திட்டங்கள் கிடைத்தன. நீண்டகால கனவான சேலம் கோட்டமும் சாத்தியமானது. இப்படியாக தமிழ்நாட்டிற்கும், சமூகநீதிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியால் கிடைத்த நன்மைகளின் பட்டியல் மிக நீண்டது. மக்களவையில் பா.ம.க. வலிமையாக இருந்ததால் தான் இது சாத்தியமானது.

மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத போதெல்லாம், சமூக நீதிக்கும், தமிழகத்தின் நலன்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த உண்மைகள் சொல்லும் பாடம் என்னவெனில், மக்களவைத் தேர்தல்களில் பா.ம.க.வின் வெற்றி தமிழ்நாட்டின் நன்மை என்பதுதான். அதனால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.