மதுபான ஊழல் குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் பெயர்: பணப்பலன் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்
திருமலை: திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2024ம் ஆண்டு வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஜெகன்மோகன் முதல்வராக இருந்தார். இதைதொடர்ந்து நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி பிடித்து, சந்திரபாபு நாயுடு முதல்வரானார். ஜெகன்மோகன் ஆட்சியில் மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு குழுவை அமைத்தது. இந்த குழு நடத்திய விசாரணையில் ரூ.3,500 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்தது.
இந்த வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி மிதுன் ரெட்டி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபான முறைகேடு வழக்கில் கோர்ட்டில் 300 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்துள்ளது. அதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மதுபான ஊழல் எப்படி நடந்தது? குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்? சாட்சிகள் யார்? என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
முறைகேடு மூலம் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பணப்பலன் பெற்றதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட தடயவியல் அறிக்கைகள், 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ. 62கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மதுபான ஊழல் தொடர்பான விசாரணைக்கு இன்று (21ம் தேதி) ஆஜராகும்படி முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான நாராயணசுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில விவகார பொறுப்பாளர் மணிக்கம் தாக்கூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மதுபான கொள்கை ஊழலில் மிதுன் ரெட்டி வெறும் கைப்பாவை மட்டுமே. ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது மனைவி பாரதியும் தான் முக்கிய மூளையாக செயல்பட்டவர்கள்.
போலி விலைப்பட்டியல்கள் மற்றும் வைப்புத்தொகைகள் மூலம் கமிஷன்கள் பெற்றனர். அந்த பணத்தை மோசடி செய்ய ஐதராபாத், பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினத்தில் ஷெல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.ரூ.3,200 கோடி பணம் அந்த ஷெல் நிறுவனங்களுக்கு அவ்வாறு திருப்பி விடப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.