Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குவைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ராமதாஸ் இரங்கல்: உடல்களை சொந்த ஊர் கொண்டு வரவும், இழப்பீடு பெற்றுத் தரவும் வலியுறுத்தல்!!

சென்னை : குவைத் தீ விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 43 பேரின் உயிரிழப்பிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை :

குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இரு தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் இந்தியர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் உள்ளிட்ட உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குவைத் தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக உடல்நலம் பெற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், அவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.