குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. எனவே குரங்குளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குஜிலியம்பாறையை அருகேயுள்ள ராமகிரி, ஆர்.கோம்பை மலையடிவார வனப்பகுதியில் காட்டு மாடுகள், குரங்குகள் அதிகளவில் உள்ளன.
இவை அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி மலைடிவார கிராமப்புற பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் வருகிறது. இந்நிலையில் குஜிலியம்பாறையில் கடந்த சில மாதங்களாகவே குரங்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இங்குள்ள உணவகங்கள், பழக்கடைகளில் புகுந்து அங்குள்ளவற்றை சாப்பிட்டு விடுகிறது. இதுதவிர திறந்த வீடுகளில் உள்ளே புகுந்து அங்கிருக்கும் உணவுகளை தின்பது மட்டுமின்றி பொருட்களையும் சூறையாடி விட்டு செல்கிறது.
மேலும் சாலைகளில் நடந்து செல்வோரின் கைகளில் உள்ள உணவு பொருட்களை பறித்து கொண்டு சென்று விடுகிறது. இதுபோல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டகாசத்தை கண்டு இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


