ரூ.28 கோடி செலவில் நடைபெறும் கொசஸ்தலை ஆறு சீரமைப்பு பணியை நீர்வளத்துறை செயலர் நேரில் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு
திருவொற்றியூர்: மழை காலத்தில் எண்ணூர் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, கொசஸ்தலை ஆறு மற்றும் முகத்துவார பகுதிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், நீர்வளத்துறை மற்றும் சிஎஸ்ஆர் நிதி மூலம் இதற்கான திட்ட பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ரூ.28 கோடி செலவில் எண்ணூர் முகத்துவாரம் முதல் வடசென்னை அனல் மின் நிலைய நுழைவாயில் வரை சுமார் 1.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொசஸ்தலை ஆற்றை தூர்வாரி சீரமைக்கும் பணியை கடந்த 30.11.2024 அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இப்பணிகள் தற்போது முழு வீட்டில் நடைபெற்று வருகிறது. இதனை நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் கோபால கிருஷ்ணன், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் அதிகாரிகளுடன் படகு மூலம் கொசஸ்தலை ஆற்றில் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, அங்கு ட்ரஜ்ஜர் இயந்திரம் மூலம் கொசஸ்தலை ஆற்றில் படிந்துள்ள சாம்பல் கழிவுகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆற்றின் ஆழம், கழிவுகளின் அளவுகள் மற்றும் தன்மைகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
மேலும், பருவ மழை காலத்திற்குள் தூர்வாரும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக ரூ.150 கோடி செலவில் முகத்துவார ஆற்றை தூர்வாரி, கரை மற்றும் தூண்டில் வளைவு போன்ற முடிக்கப்பட்ட பணிகளையும், திருவொற்றியூர் கார்கில் நகர் அருகே பக்கிங்காம் கால்வாயில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பாலாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் மகேஷ் நாகராஜன், ஆரணி ஆறு செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் நவீன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.