Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை விவகாரம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி: கைதான சஞ்சய் ராயிடம் நடத்தப்படுகிறது

கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைதான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை 2ம் ஆண்டு படித்த பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ம் தேதி இரவுப்பணியின் போது பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பலியான பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில், மருத்துவமனையில் போலீசாருக்கு உதவும் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரைத் தவிர மேலும் பலருக்கும் இந்த கொலையில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 20 பேரிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக சந்தீப் கோஷிடம் கடந்த 4 நாட்களாக தினமும் 14 மணி நேரம் வரையிலும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும், பெண் டாக்டரின் உடலில் பல காயங்கள் இருப்பதும், பலாத்கார முயற்சிகள் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கைதான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று அனுமதி கேட்கப்பட்டது.

இதற்கு அனுமதி வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் தேதி முடிவாகவில்லை என சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.. இந்த சோதனை மூலம், சஞ்சய் ராய் மட்டுமே தனியாக இந்த கொடூரத்தை செய்தாரா, இந்த சம்பவத்தில் வேறு யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்த உண்மைகள் தெரியவரும் என சிபிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கொல்கத்தாவில் நேற்றும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம் நீடித்ததால், மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

வெளிப்புற நோயாளிகளுக்கு ஜூனியர் டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். இதனால் போதிய டாக்டர்கள் இல்லாமல் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர். பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறுகையில், ‘‘பல நெருக்கடிக்கு மத்தியிலும், நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக 36 மணி நேரம் சிகிச்சை அளித்த பெண் டாக்டர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கு நீதி கேட்பதற்காக நடத்தப்படும் போராட்டம் இது. சடலம் கைப்பற்றப்பட்டு 11 நாளாகி விட்டது, ஆனால் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்’’ என்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்குக்கு முன்னுரிமை தரப்பட்டு காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

மம்தா மீது நம்பிக்கை இழந்து விட்டோம்

கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி டாக்டரின் பெற்றோர் அளித்த பேட்டியில், ‘‘மேற்கு வங்க முதல்வர் மம்தா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் இப்போது அது இல்லை. அவர் நீதி வேண்டுமென கேட்கிறார், ஆனால் அதற்காக அவர் என்ன செய்தார்? எந்த நடவடிக்கை மம்தா எடுக்கவில்லை. எங்கள் மகளின் சடலத்தை விரைவாக தகனம் செய்ய நாங்கள் வற்புறுத்தப்பட்டோம். இந்த கொலையில் சிலரை காப்பற்ற நிறைய விஷயங்களை மறைக்க முயற்சித்தனர்’’ என்றனர்.