பெரம்பூர்: பல்வேறு துறை சார்ந்த சேவைகள் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் வார்டு வாரியாக திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. எந்த வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது என்பதை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவித்து அவர்கள் தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்ட முகாம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அந்த வகையில். தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 69வது வார்டில் இன்று காலை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டனர்.
பின்னர், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு, உடனடி தீர்வு காணும்படி அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி உடனடி தீர்வு காணக்கூடிய மனுக்களுக்கு அதிகாரிகள் தீர்வு கண்டு, நகல்களை பொதுமக்களிடம் வழங்கினர். முகாமில், திருவிக நகர் மண்டலக்குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், சந்துரு, திருவிக நகர் மண்டல பொறுப்பு அதிகாரி முருகன், செயற்பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.