ஈரோடு: ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதளமாக கொடிவேரி அணை விளங்கிவருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையில் இருந்து சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டுவதாலும், ஒரே நேரத்தில் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கு பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வொரு அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகள் வருவது வழக்கமாக இருந்துள்ளது.
இது தவிற மைசூர், பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் இருந்துகூட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே குறைந்த செலவில் முழு விடுமுறையை செலவிடமுடியும் என்பதே ஆகும். இந்த அணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதால் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் பவானி அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதும் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் திறக்கப்பட்டதால் கொடிவேரி அணையில் சுமார் 10,000 கனஅடிநீர் செல்கிறது.
இதனால் கடந்த 9 நாட்களாக கொடிவேரி அணை பகுதிகளில் சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு பல்வேறு பகுதிகளில் வருந்துள்ள சுற்றுலாபயணிகள் அணையில் குளிக்க முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.