கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலையில் குடியிருப்பு பகுதியில் இன்று காலை காட்டுயானை புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. குறிப்பாக கீழ்மலை கிராமங்களான பெரியூர், கே.சி.பட்டி, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஒற்றை காட்டு யானை உலா வந்தது. இந்த யானை பயிர்களை சேதபடுத்தியது.
இந்நிலையில் பெரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்து கால்வாய் மலைக்கிராமத்தில் இன்று காலை குடியிருப்பு பகுதியில் திடீரென ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதனால் கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பலர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். பின்னர், அந்த யானை அங்கிருந்து சென்றது. இருப்பினும், ஒற்றை யானை நடமாட்டத்தால் மலைக்கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு அந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பூலத்தூர் அருகே நேற்று முன்தினம் இரவு காட்டுமாடு தாக்கியதில் விவசாய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.