Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஷ்புவுக்கு பதவி; மீண்டும் ஓரங்கட்டப்பட்ட விஜயதரணி; தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்

சென்னை: தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் பட்டியலை நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டார். இதில், நடிகை குஷ்புவுக்கு மாநில துணை தலைவர் பதவி கிடைத்துள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்த விஜயதரணி மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். கே.டி.ராகவனுக்கு மீண்டும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜ தேசிய தலைமை தமிழக தலைவர் அண்ணாமலையை மாற்றிவிட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தது. அவர் நியமிக்கப்படும்போது 16 மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மேலும் 16 மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தமிழக பாஜவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அதன்பின் தமிழக பாஜவுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நயினார் நாகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்குவதால் பெரியளவில் மாற்றங்கள் தேவையில்லை என்றும் அமித்ஷா தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தனது பரிந்துரைகளை எடுத்துக் கொண்டு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, தமிழக பாஜ தலைவர் சந்தித்தார்.

இந்நிலையில், நிர்வாகிகள் பட்டியலை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஒப்புதலோடு நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழக பாஜவின் துணைத் தலைவர்களாக எம்.சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால்கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என்.சுந்தர் என 14 பேரும், அமைப்புச் செயலாளராக கேசவ விநாயகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில பொதுச்செயலாளர்களாக வி.பாலகணபதி, ராம னிவாசன், எம்.முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி.முருகானந்தம் என 5 பேரும், மாநிலச் செயலாளர்களாக முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், வெங்கடேசன், மலர்கொடி, சுமதி வெங்கடேசன், மீனாட்சி, சதீஷ்குமார், மீனாதேவ், வினோஜ் பி.செல்வம், அஸ்வத்தாமன், ஆனந்த பிரியா, பிரமிளா சம்பத், கதளி நரசிங்க பெருமாள், நந்தகுமார், ரகுராமன், அமர்பிரசாத் ரெட்டி என 15 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர், இணை பொருளாளராக சிவசுப்பிரமணியம், மாநில அலுவலக செயலாளராக சந்திரன், சமூக ஊடக அமைப்பாளராக பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அமைப்பாளராக மகேஷ்குமார், மாநில தலைமை செய்தி தொடர்பாளராக நாராயணன் திருப்பதி, மாநில ஊடக அமைப்பாளராக ரெங்கநாயகலு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே தமிழக பாஜ இளைஞரணி தலைவராக இருந்த ரமேஷ் சிவா மாற்றப்பட்டு மாநில இளைஞரணி தலைவராக எஸ்.ஜி.சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிர்கோஷ்டியாக செயல்படக்கூடியவர். வரும் சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த தொகுதிகளில் வாய்ப்பு கேட்டு தமிழிசையும் முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மாநில மகளிர் அணி தலைவராக இருந்த உமா ரதியை தூக்கிவிட்டு புதிய தலைவராக கவிதா ஸ்ரீகாந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, ஓபிசி அணி தலைவராக இருந்த சாய் சுரேஷ் என்பரை மாற்றிவிட்டு திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்சி அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி, அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இணைந்தார்.

இதனால் இந்த பதவி தற்போது செங்கல்பட்டு சம்பத் ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எஸ்டி அணி தலைவராக இருந்த சிவ பிரகாசம், முன்னாள் எம்எல்ஏவான இவர் அதிமுகவில் இருந்து பாஜவில் இணைந்ததால் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. அவரை மாற்றிவிட்டு புதிய தலைவராக சுமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில சிறுபான்மையினர் அணி தலைவராக திருச்சியை சேர்ந்த டெய்சி என்பவர் இருந்தார். இவருக்கும் பாஜவில் இருந்த திருச்சி சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் ஆபாசமாக பேசி சண்டையிட்ட ஆடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், அவரை மாற்றிவிட்டு புதிய சிறுபான்மையினர் அணி தலைவராக கோவையைச் சேர்ந்த ஜான்சன் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில விவசாயி அணி தலைவராக ஏற்கனவே இருந்த ஜி.கே.நாகராஜிக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அணி தலைவர்களை பொறுத்தவரை விவசாய அணியை தவிர மற்ற தலைவர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேறு எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிர்வாகிகள் பட்டியலை பொறுத்தவரை, துணை தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர், செயலாளர்கள் யாரும் மாற்றப்படவில்லை. ஆனால் நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்கள் சிலரை மட்டும் கூடுதலாக சேர்த்துள்ளார்.

* கே.டி.ராகவனுக்கு மீண்டும் முக்கிய பதவி

கடந்த 2021ல் தமிழக பாஜவின் மாநில பொதுச் செயலாளராக கே.டி.ராகவன் பதவி வகித்து வந்தார். தற்பொது வெளியாகியுள்ள தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் பட்டியலில் படி, தமிழ்நாடு பாஜவின் மாநிலப் பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி தமிழக பாஜவில் உள்ள 20 பிரிவு அமைப்புகளுக்கும் பொறுப்பாளராக செயல்படக்கூடியது. இணை பொறுப்பாளராக நாச்சியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக இந்த பதவி உருவாக்கப்பட்டு, ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் கட்சியில் பலம் பெற்று வருவதை காட்டுகிறது. மாநில தலைவருக்கு அடுத்தபடியாக மிக முக்கிய பதவியாக பார்க்கப்படுவதால் கட்சி வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

* சரத்குமார், மீனா புறக்கணிப்பு

மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜவில் இணைந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்று கட்சி தலைமை உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை நம்பி முக்கிய கட்சிகளில் இருந்து விலகி பாஜவில் இணைந்தவர்கள் முக்கிய பதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் பலருக்கும் அவ்வாறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில், சமத்துவ மக்கள் கட்சி என்ற தனது கட்சியையே கலைத்து விட்டு, அதை பாஜவுடன் இணைத்த சரத்குமாருக்கும் எந்த பொறுப்பும் வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, அண்மையில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை நடிகை மீனா சந்தித்திருந்தார். இதனால் முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மீனாவும் ஓரங்கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மீண்டும் அல்வா கொடுத்த பாஜ

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான விஜயதரணி, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜவில் இணைந்தார். காங்கிரசில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் பாஜவில் இணைந்தார். ஆனால் கட்சியில் சேர்ந்தது முதல் விஜயதரணிக்கு எந்த பொறுப்பும், பதவியும் வழங்காமல் அவருக்கு ஏமாற்றத்தை பரிசளிப்பதையே பாஜ வழக்கமாக வைத்துள்ளது. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் வந்த பிறகு தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என விஜயதரணி எதிர்பார்த்தார். ஆனால், இப்போது வெளியான பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் தனக்குப் பதவி கிடைக்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8மாதங்கள் உள்ள நிலையில், அப்போதும் விஜயதரணிக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்றால், அவர் பாஜவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

* மாநில துணை தலைவரானார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு 2020 அக்டோபர் 12ம் தேதி டெல்லியில் பாஜ தேசிய தலைவர் நட்டா தலைமையில் பாஜவில் இணைந்தார். தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வகித்து வந்த குஷ்பு, அந்த பொறுப்பில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். கடந்த தேர்தலில், சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். முன்னணி நட்சத்திரமாக இருப்பதால் அவருக்கு பாஜவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதனை எதிர்பார்த்தார். ஆனால் மேலிடம் தன்னை கண்டு கொள்ளவில்லை என்ற அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவருக்கு மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.