Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் பரபரப்பு; பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் மர்மசாவு: போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே சோட்டானிக்கரையில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலையாள சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கலாபவன் நவாஸ் (51). கேரளாவில் பிரபலமான கலாபவன் குழுவில் மிமிக்ரி கலைஞராக இருந்த இவர், பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்த குழுவில் தான் கலாபவன் மணி, ஜெயராம் உள்பட பிரபலமான மலையாள சினிமா நடிகர்கள் மிமிக்கிரி கலைஞர்களாக இருந்தனர். கலாபவன் நவாஸ் கடந்த 1995ல் வெளியான சைதன்யம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் மிமிக்ஸ் ஆக்ஷன் 500, ஜூனியர் மான்ட்ரேக், ஹிட்லர் பிரதர்ஸ், பஸ் கண்டக்டர், மாயாஜாலம், தில்லானா தில்லானா, வெட்டம் உள்பட ஏராளமான மலையாள திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில் கலாபவன் நவாஸ், பிரகம்பனம் என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு எர்ணாகுளம் அருகே உள்ள சோட்டானிக்கரையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதனால் சோட்டானிக்கரையில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார். நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதனால் நேற்று ஆலுவாவில் உள்ள வீட்டுக்கு செல்ல கலாபவன் நவாஸ் திட்டமிட்டிருந்தார். மாலையில் அறையை காலி செய்வதாக ஓட்டல் ஊழியர்களிடம் கூறியிருந்தார்.

இரவாகியும் அறையை காலி செய்யாததால் ஓட்டல் ஊழியர்கள் போன் செய்தனர். ஆனால் கலாபவன் நவாஸ் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அறைக்கு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கலாபவன் நவாஸ் தரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் கலாபவன் நவாஸ் இறந்து விட்டதாக கூறினர்.

தகவலறிந்து சோட்டானிக்கரை போலீசார் விரைந்து சென்று கலாபவன் நவாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக மர்ம சாவாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலாபவன் நவாஸ் மரணமடைந்தது குறித்து அறிந்ததும் ஏராளமான மலையாள சினிமா கலைஞர்கள் அவரது உடலை பார்ப்பதற்காக மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் கலாபவன் நவாஸ் மரணத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இறந்த கலாபவன் நவாசிற்கு ரெஹ்னா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ரெஹ்னாவும் ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.