Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் மூளை தின்னும் அமீபா பரவல் நீர் நிலைகளின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்நிலைகளின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம்: முதன்மை அமீபிக் மெனிங்கோ-என்செபாலிடிஸ் (பிஏஎம்), என்பது யூகாரியோட் நெக்லேரியா ஃபோலேரி மூலம் மூளையில் ஏற்படும் அபாயகரமான தொற்று ஆகும்.

இதற்கு மூளைக்காய்ச்சல் போன்ற தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். கேரளாவில் இருந்து சமீபத்தில் பதிவாகும் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, இந்த இயக்குநரகத்திலிருந்து கண்டிப்பாகப் பின்பற்றுவதற்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. தேங்கி நிற்கும், மாசுபட்ட அழுக்கு நீரில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் நீந்துவதற்கும், குளிப்பதற்கும் அனுமதிக்க கூடாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்டிப்பாக அறிவுறுத்த வேண்டும்.

தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.  பொது சுகாதார வழிகாட்டுதல்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் செய்யப்பட வேண்டும். இந்த சூழலில் உயிரினம் உயிர்வாழ முடியாது என்பதால், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2 பிபிஎம்க்கு மேல் குளோரின் அளவை சம்பந்தப்பட்ட உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட வேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான ஏதாவது நிகழ்வை கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.