Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழடி அகழாய்வு தமிழர்களின் பழமையான நாகரீகம் தமிழ்நாடு அரசு முயற்சிக்கு அதிமுக துணை நிற்கும்: எடப்பாடி பேட்டி

திருப்புவனம்: தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தார். நேற்று கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அங்கு அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு தமிழர்களின் பழமையான நாகரீகத்தை வெளிப்படுத்துகிறது. கிமு 6ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மண் பாண்டங்கள், செம்பு, தங்க ஆபரணங்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2017-18ல் நடந்த மூன்றாம் கட்ட அகழாய்வில் 5,820 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

2018ல் கண்டெடுக்கப்பட்ட 6 கரிம மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு கீழடி நாகரிகத்தின் காலம் கிமு 6ம் நூற்றாண்டு என உறுதி செய்யப்பட்டது. இன்று கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். கீழடி விவகாரத்தில் மாநில அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம். கீழடி அகழாய்வு மிக முக்கியமானது. இதில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது. கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும். இப்போது கீழடி ஆய்வு அறிக்கையில் மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டார்கள்; இவர்கள் என்ன விளக்கம் கொடுத்தார்கள் என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. தெரிந்தால் தானே நாங்கள் பதில் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல்

போலீசார் விசாரணையின்போது உயிரிழந்த மடப்புரத்தில் உள்ள அஜித்குமார் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்றார். அங்கு தாயார் மாலதி, தம்பி நவீன்குமார் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து அஜித்குமாரின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை இரண்டொரு நாளில் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தருவார் என குடும்பத்தினரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘‘மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையால் விலை மதிக்க முடியாத உயிரை இழந்திருக்கிறோம். ஐகோர்ட் கிளயைில் எங்கள் வழக்கறிஞர் மாரீஸ்குமார் இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்” என்றார்.

* ஜிஎஸ்டி இல்லாமல் ஆட்சி நடத்தினோம்: வாய் கூசாமல் பொய் பிரசாரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் அருகே நேற்று மாலை எடப்பாடி பிரசாரம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்தி மட்டுமே பயிரிடப்படுகிறது. ஆனால், எடப்பாடி பேசியபோது கரும்பு, மஞ்சள் விளைவிப்பதாக கூறி மக்களை மிரள வைத்தார். மேலும், தனது ஆட்சிக்காலத்தில், ‘‘ஜிஎஸ்டி வரி இல்லாமல் நாங்கள் ஆட்சி நடத்தினோம். மக்கள் மீது வரி போடவில்லை. தற்போதைய ஆட்சியில் ஜிஎஸ்டியை காரணம் காட்டி பல வரிகளை வசூலிக்கின்றனர்’’ என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி (16.2.2017 - 6.5.2021) ஆட்சி காலத்தில்தான் ஜிஎஸ்டி வரி (1.7.2017) இந்தியாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

* எடப்பாடிக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்போம்: பரமக்குடியில் கண்டன போஸ்டர்

சிவகங்கை சுற்றுப்பயணத்தை முடித்த பின், எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பரமக்குடி வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், `‘விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயமாக பெற்றுத்தருவேன் என்று எடப்பாடி கூறியுள்ளார். எங்களது சமுதாயத்தை அழிக்க சதி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக, 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம்’’ என்ற வாசகங்களுடன் முக்குலத்தோர் தேவர் கூட்டமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

* சேலை, தட்டு, 200 ரூபாய் பணம் தந்து கூட்டி வந்தாங்க...

சிவகங்கையில் நேற்று முன்தினம் இரவு எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக வந்த ஒரு பெண், ஒருவரிடம் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.அந்த உரையாடல் வருமாறு: ‘‘நீங்க எல்லாம் எந்த ஊரும்மா’’ என கேள்வி கேட்க அந்தப்பெண், ‘‘மெட்ராஸ்’’ ஒரு சேலை, ஒரு தட்டு, 200 பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளனர். 4 ஆயிரம் பேரை வரச் சொல்லியுள்ளனர். எவ்வளவு வாங்கிருக்காங்கன்னு தெரியலை. இன்னும் 200 ரூபாய் தரலை. சேலை, தட்டு, டோக்கன் மட்டும் கொடுத்திருக்காங்க.. இந்திரா நகரில் இருந்து 300 பேர் வந்துருக்கோம். நாளைக்கு மானாமதுரையாம். இன்னைக்கு தங்கி நாளைக்கு போகணும்’’ என்றார்.

* ‘ஆபரேஷன் சித்தூர்’ கலாய்த்த வாலிபர்கள்

மானாமதுரையில் நேற்று எடப்பாடி பேசியபோது, ஆபரேசன் சிந்தூர் என்பதற்கு பதிலாக பலமுறை ஆபரேசன் சித்தூர் என திரும்ப திரும்ப கூறினார். அங்கிருந்த இளைஞர்கள் ஏது காட்பாடிக்கு பக்கத்துல இருக்கிற அந்த சித்தூரா என கேட்டு சிரித்தனர். மெத்தபெட்டமைன் என்பதற்கு மெத்தனால் என பேசினார். அதுபோல், அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெயரை வாசிப்பதற்கு சிரமப்பட்டார். மேலும், கிராமங்களை படித்து பார்த்து பேசும்போது தப்பும் தவறுமாக பேசினார்.