அஞ்செட்டி அருகே பரபரப்பு; தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கிய கர்நாடக அரசு பஸ்: 25 பயணிகள் உயிர் தப்பினர்
ஓசூர்: ஒகேனக்கல் நோக்கி சென்ற கர்நாடக அரசு பஸ், பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடி வனப்பகுதியில் உள்ள மண் திட்டின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம், கனகபுராவில் இருந்து அம்மாநில அரசு பஸ், 25 பயணிகளுடன் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி காவல் நிலையம் அடுத்துள்ள சீங்கோட்டை பகுதியில் அந்த பஸ் வந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோர வனப்பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த மண் திட்டின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் நடத்துனர் உட்பட 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. மற்ற பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்த 3 பேரை, பயணிகள் மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மண் திட்டின் மீது பஸ் மோதி நின்றதால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.