Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார்கிலில் ஆபத்தான நிலையில் கிடந்த ராணுவ வீரர் மீட்பு: இந்திய விமானப்படை அதிரடி

புதுடெல்லி: கார்கிலில் ஆபத்தான நிலையில் கிடந்த ராணுவ வீரரை இந்திய விமானப் படை பத்திரமாக மீட்டுள்ளது. சமீபத்தில் சிக்கிம் வடக்கு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை அவசர மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொண்டது. கடந்த 4ம் தேதி, தொலைதூர மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட சாட்டன் பகுதியில் இருந்து, இரண்டு அமெரிக்கர்கள் உட்பட நிலைச்சரிவில் சிக்கித் தவித்த 33 பேரை இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக மீட்டன.

இந்தப் பணிகளின்போது, தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அப்பகுதிக்குக் கொண்டு செல்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவது போன்ற பணிகளையும் விமானப்படை மேற்கொண்டது. இருப்பினும், இதற்கு முன்னதாக லாச்சென் பகுதியில் சிக்கியிருந்த 113 சுற்றுலாப் பயணிகளை மீட்கும் முயற்சி, மோசமான வானிலை மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மீட்புப் பணிகளின் தொடர்ச்சியாக, நேற்று இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்-32 ரக விமானம் ஒன்று, உயரமான கார்கில் பகுதியில் இருந்து கவலைக்கிடமான நிலையில் இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரை வெற்றிகரமாக மீட்டு, சண்டிமந்திர் கமாண்ட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.

கார்கிலின் உயரமான பகுதி மற்றும் கோடைக்காலத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை ஆகியவை போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், இந்த மீட்புப் பணி அதிகாலையிலேயே, விமானத்தின் செயல்திறன் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.