Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரைக்கால் அம்மையார்-பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்து வழிபடும் நிகழ்ச்சி

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோயிலில் நடைபெறும் மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையார்-பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு மாங்கனி திருவிழா பந்தல்கால் முகூர்த்ததுடன் கடந்த மே மாதம் துவங்கியது. ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பரமதத்த செட்டியாரை காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் மாங்கனி திருவிழா நேற்றிரவு துவங்கியது.

இதையொட்டி கைலாசநாதர் கோயிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் திருக்கல்யாண வைபவத்திற்காக பரமதத்தர், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக வந்து அம்மையார் மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று காலை காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை‌, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து குதிரை வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் புனிதவதியார் சந்திர புஷ்கரணியில் நீராடி பட்டாடை உடுத்தி திருமண கோலத்தில் எழுந்தருளினார். இதைதொடர்ந்து தமிழ் பாரம்பரியப்படி திருமண மேடையில் தாம்பூலம் மாற்றி கொண்டு புனிதவதி அம்மையார்-பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் காலை 11 மணிக்கு நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனிகள் கூடிய தாம்பூல பை வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று மாலை கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றுடன் சிவதாண்டவம் நடக்கிறது. இதைதொடர்ந்து பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பரமதத்த செட்டியாரும், புனிதவதியாரும் முத்து சிவிகையில் வீதியுலா நடக்கிறது.

முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா நாளை (21ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது. பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார். அப்போது பக்தர்கள் வீட்டு மாடிகளில் நின்று மாங்கனிகளை இறைத்து வழிபடுவர். அன்று மாலை 6 மணிக்கு அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைத்தல், இரவு 11 மணிக்கு பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோயிலில் பரமதத்தருக்கு 3வது திருமணம், 22ம் தேதி அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூலை 21ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.