கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டவுடன் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
சென்னை: கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்ட உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் கட்டப்பட்ட பிறகு சுமார் 17 லட்சம் பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
அவ்வப்போது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 16ம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட போது, 8 மீட்டர் உயரத்தில் ஆர்ச்சில் உள்ள போல்டுகளை சரி செய்யும் பொழுது சுத்தியல் கை தவறி விழுந்து விட்டது. அதன் விளைவாக கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் மெல்லிய விரிசல் ஏற்பட்டது. உடனடியாக சேதமடைந்த இடத்தில் மட்டும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி தடுப்பாண்கள் அமைக்கப்பட்டது. கண்ணாடி பாலத்தின் தாங்கும் திறன் வலுவாகவும் தரமாகவும் உள்ளது. அங்கு பயன்படுத்தியுள்ள கண்ணாடியானது ரையின்போர்ஸ் (reinforced glass) ஆகும்.
பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை ஒப்பந்ததாரரிடம் தெரிவிக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட கண்ணாடியை 2 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், அதே வடிவமைபில் அதே தரத்துடன் கம்பி இழையிலான கண்ணாடி கடந்த 8ம் தேதி இரவு பொருத்தப்பட்டது. மேலும், போதுமான எடையினைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாங்குதிறன் உறுதி செய்யப்பட்டதில் கண்ணாடி பாதுகாப்பாக உள்ளது. 77 மீட்டர் நீளமுடைய கண்ணாடி பாலத்தில், ஒரே நேரத்தில், 650 நபர்கள் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரரின் பராமரிப்பு காலம் 10 ஆண்டு காலம் என்பதால், சேதமடைந்த கண்ணாடியினை ஒப்பந்ததாரரின் செலவிலேயே சரி செய்யப்பட்டுவிட்டது.
தற்போது, அனைத்து பார்வையாளர்களும், கண்ணாடி பாலத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். விரிசல் ஏற்பட்ட கண்ணாடி பாலத்திலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நடத்து சென்றுகொண்டிருந்தனர். இதனாலும் பாலத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட்டவில்லை. எனவே கண்ணாடி பாலம் குறித்து அச்சப்பட தேவையில்லை. மேலும் பாலம் கட்டும் போது இருந்த பாதுகாப்பு, உறுதி தன்மை தற்போதும் உள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் 650 பேர் நிற்கும் அளவிற்கு தாங்கும் திறன் கொண்டது. உலக சுற்றுலா பயணிகள் பாராட்டும் அளவிற்கு கண்ணாடி பாலம் அவ்வளவு உறுதி தன்மையுடன் உள்ளது. நாள் ஒன்றுக்கு 8000 நபர்கள் வரை கண்ணாடி பாலத்தில் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இது மேலும் அதிகரிக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.