சென்னை :படிக்காத காமராசர் பள்ளிகள் செய்தார். வீடுகட்டாத காமராசர் அணை கட்டினார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் காமராஜருக்கு கவிதை பாணியில் கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்
"படிக்காத காமராசர்
பள்ளிகள் செய்தார்
வீடுகட்டாத காமராசர்
அணை கட்டினார்
புத்தகம் எழுதாத காமராசர்
நூலகம் திறந்தார்
கையில் காசு
வைத்துக்கொள்ளாத காமராசர்
ஏழைத் தமிழர்களை
ஈட்டச் செய்தார்
மற்றவர்க்கு நாற்காலி தந்து
தன் பதவி தான்துறந்தார்
கருப்பு காந்தி
என்று அழைக்கப்பட்டாலும்
காந்தி காணாத
துறவறம் பூண்டார்
காமராசர் நினைக்கப்பட்டால்
அறத்தின் சுவாசம்
அறுந்து விடவில்லை
என்று பொருள்
காமராசர் மறக்கப்பட்டால்
மழையே தண்ணீரை
மறந்துவிட்டது என்று பொருள்
நான் உங்களை
நினைக்கிறேன் ஐயா"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.